இந்தியா செய்திகள்

அரசு மரியாதையுடன் அனில் மாதவ் தவே உடல் தகனம்

19 May 2017

மத்திய மந்திரி சபையில் சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை இணை மந்திரியாக (தனிப்பொறுப்பு) பதவி வகித்து வந்தவர் அனில் மாதவ் தவே. டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோது, நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 8.50 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி 9.45 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது உயிரை காப்பாற்ற அனைத்து வழிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை எனவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

அனில் மாதவ் தவே இறந்த தகவல் அறிந்ததும் வெங்கையா நாயுடு, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், தாவர்சந்த் கெலாட், ஹரிஷ்வர்தன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது உடல் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. தனது இறப்புக்குப்பின் தன்னுடைய உடலுக்கு ஹோசங்காபாத் மாவட்டத்தின் பந்த்ராபனில், நர்மதை நதிக்கரையில் எளிமையாக இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என அனில் மாதவ் தவே உயில் எழுதி வைத்திருந்தார்.

அதன்படி அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக இன்று பந்த்ராபன் நர்மதை நதிக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு, அனில் தவேயின் சகோதரர் மற்றும் மருமகன் ஆகியோர் இறுதிச்சடங்குகள் செய்தனர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், உமாபாரதி, அனந்தகுமார், நரேந்திர சிங் தோமர், தாவர்சந்த் கெலாட் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha