இந்தியா செய்திகள்

ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் தலைநீட்டும் பாஜக! அதிமுக புலம்பல்

18 May 2017

தமிழக அரசில் மட்டுமல்ல, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களிலும் பாஜக தலையிடுவதாக கோட்டை வட்டாரத்திலேயே பரபரப்பு பேச்சுகள் கூடுதலாகவே வலம் வருகின்றன.

இதுகுறித்து கோட்டை வட்டாரத்தினர் நம்மிடம், “கடந்த சில நாட்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனம்புரியாத டென்ஷனில் இருக்கிறார். தனது உதவியாளர்களிடமும் எரிந்து எரிந்து விழுகிறார். சில அதிகாரிகளிடம்கூட வழக்கத்துக்கு மாறாக கோப முகம் காட்டுகிறார். எடப்பாடியிடம் தென்படும் இந்த மாற்றம் எல்லாம் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கோட்டைக்கு வந்து சென்றதில் இருந்துதான். அதற்கு முன்பு சிரித்த முகமாக இருந்த முதல்வர், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கோட்டைக்கு வந்து சென்றதில் இருந்தே  இப்படித்தான் டென்ஷனில் இருக்கிறார்.

14/05/2017 அன்று மெட்ரோ ரயில் விழாவுக்காக சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்துக்குச் சென்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

இதுவரை இல்லாத வகையில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தமிழக அரசின் திட்டங்களைப் பற்றிய ஆய்வு நடத்தினார். அப்போது அவர், ‘பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி தமிழகத்தில் ஒழுங்காக செலவிடப்படவில்லை. அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக தெரியவந்துள்ளன’என்று சொல்லி இதுபற்றிய புள்ளி விவரங்களையும் முதல்வர் எடப்பாடியிடம் கொடுக்க, எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகிவிட்டார்.

உடனே, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதிலுக்கு ஒரு புள்ளி விவரத்தை மத்திய அமைச்சரிடம் கொடுக்க... இரண்டையும் ஒப்பிட்ட வெங்கைய்ய நாயுடு, ‘பாருங்கள். இரு பட்டியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் சொல்வது சரிதான்’ என்று மேலும் குரலை உயர்த்தியிருக்கிறார்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனியாகவும் சந்தித்து பேசிச் சென்றுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு. இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் முதல்வர் மேலும் டென்ஷனாகி கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார்.

இதுபற்றி தனக்கு நெருக்கமான கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரிடம் முதல்வர் பேசுகையில், ‘மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தலைமைச் செயலகத்துக்கு வந்து தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஆய்வு செய்தது மாநில சுயாட்சிக்கு எதிரானதுன்னு எதிர்க்கட்சிகாரங்க கண்டனம் தெரிவிக்கிறாங்க. ஆனா... அவர் அதை மட்டுமா செஞ்சாரு? நம்ம பார்ட்டி ஃபண்டு பத்தியெல்லாம் விசாரிக்கிறார். இது எங்க போய் முடிய போகுதோன்னு தெரியலை. அதிமுகவோட அடி மடியிலேயே கை வைக்கிற மாதிரிதான் இருக்கு இதெல்லாம்’ என்று தன் மனம்விட்டு பகிர்ந்துகொண்டாராம்'' என்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha