உலகம் செய்திகள்

ஆளில்லா முதல் சரக்கு விண்கலத்தை விண்ணில் ஏவியது சீனா

21 Apr 2017

விண்ணில் நிரந்தர விண்வெளி நிலையத்தினை ஒரு சில வருடங்களில் அமைப்பது என்ற இலக்கினை சீனா கொண்டுள்ளது.

இந்நிலையில் அதன் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக டியான்ஜூ-1 என்ற விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.  சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தில் அமைந்துள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலத்தினை மார்ச்-7 ஒய்2 என்ற ராக்கெட் சுமந்து சென்றது.

அதன்பின் ஒரு சில மணிநேரங்களில் விண்கலம் சரியான சுற்று வட்டபாதைக்குள் நுழைந்தது.  இதனையடுத்து விண்வெளி துறை அதிகாரிகள் விண்கலம் வெற்றிகரமுடன் ஏவப்பட்டது என அறிவித்தனர்.

இந்த சரக்கு விண்கலம் விண்வெளியில் இயங்கி வரும் டியான்காங்-2 விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயல்படும்.  அதற்கு தேவையான எரிபொருள் மற்றும் பிற பொருட்களையும் வழங்கும்.  பூமியில் திரும்பி விழுவதற்கு முன் விண்வெளி பரிசோதனைகளையும் அது நடத்திடும்.

விண்வெளி நிலையத்தினை பராமரிக்கும் பணியில் உதவிடும் என்ற வகையில் முதல் முறையாக ஏவப்பட்டுள்ள இந்த சரக்கு விண்கலம் ஆனது முக்கியத்துவம் பெறுகிறது.

சரக்கு போக்குவரத்து அமைப்பு இல்லையென்றால், விண்வெளி நிலையம் இயங்க தேவையான ஆற்றல் மற்றும் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் போய்விடும்.  அதனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே அது பூமியில் விழுந்து விடும்.

சீனா வருகிற 2022ம் ஆண்டிற்குள் நிரந்தர விண்வெளி நிலையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.  அது 10 வருடங்கள் விண்வெளியில் சுற்றி வரும் வகையில் இயங்கும் என கருதப்படுகிறது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha