இந்தியா செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணக்கும் முயற்சியில் காங்கிரஸ்…

18 May 2017

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தரப்பிலான வேட்பாளரை முடிவு செய்ய, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுசேர்க்கும் நடவடிக்கையில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார்.

இதற்காக ஏற்கெனவே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஷரத் பவாருடன் சோனியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் 16/05/2017 அன்று சோனியா காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புதுடெல்லியில் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “இது ஒரு முக்கியமான சந்திப்பு. இரண்டு அரசியல் தலைவர்கள் சந்திக்கையில் அரசியல் குறித்து விவாதம் நடப்பது இயல்பு. அரசியல் குறித்தும், குடியரசு தலைவர் தேர்தல் குறித்தும் நாங்கள் இருவரும் ஆலோசித்தோம்.

சமீபத்தில் இந்தியாவில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. அனைவரும் ஒருமனதாக ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதே நல்ல முடிவாக இருக்கும். மேலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதென நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று(17/05/2017) சோனியா காந்தி, லாலு பிரசாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், குடியரசு தலைவருக்கான தேர்தல் குறித்து இவர்கள் ஆலோசித்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha