வரலாறு செய்திகள்

போதி தர்மர்

20 Aug 2016

போதி தர்மர் போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.

போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். 

தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர் ’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல் படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும் கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள் தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒன்பது வருடங்கள் தியானம் செய்த போதிதர்மா அங்கிருந்து கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன. ”க்ஸி சுய் ஜிங்” (மஜ்ஜை சுத்திகரிப்பு) மற்றும் “யி ஜின் ஜிங்” (தசைகளின் மாற்றம்) என்னும் நூல்கள் அவை. இவற்றில் முதல் நூலை போதிதர்மாவின் சீடரான ஹுய்கே என்பவர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறைந்து போகிறார். இரண்டாம் நூலை புத்த பிட்சுக்கள் எடுத்துக்கொண்டு அதில் இருந்த பயிற்சிகளை மாற்றியமைத்து ஷாவொலின் குங்ஃபூ கலையாக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் போதிதர்மா குங்ஃபூவின் பிதாமகராக புனையப்பட்டார் என்று டாங் ஹாவோ, ஸூசென், மத்ஸுடா ர்யூச்சி, லின் போயுவான் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு புனைவுக்கதையாகவே இருந்தாலும் இதில் அற்புதமான ஒரு உள்-பார்வை இருக்கிறது. அதாவது, போதிதர்மா மனம்-உடல் இரண்டையுமே வலிவுள்ளதாக மாற்றுவதற்கான பயிற்சிகளைத்தான் வழங்கியிருக்கிறார். மஜ்ஜை என்பது அகத்தைக் குறிக்கும். தசைகள் என்பது உடலைக் குறிக்கும். இன்னொரு பார்வையில் மஜ்ஜை என்பது ஆன்மிக சாராம்சத்தைக் குறிக்கும். தசைகள் என்பவை புறச் சடங்குகளைக் குறிக்கும். ஆனால் அந்த பிட்சுக்கள் போதிதர்மாவின் ஆன்மிக சாராம்சத்தை விளங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அது ஒரு சீடரின் வழியே ரகசியமாக்கப்பட்டு விட்டது. பிட்சுக்கள் புறச்சடங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். அதனைப் போர்க்கலையாக மாற்றிவிட்டார்கள்!

‘மனதிலிருந்து விடுதலை அடைய வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் எதார்த்த நிலையே ஞானம்” என்பதுதான் போதிதர்மாவின் போதனைகளின் சாரம். மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் என்று சொன்னவர் அவர். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். கால-இடத் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.








கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha