இந்தியா செய்திகள்

’’மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்!’’ அமைச்சர் வீரமணி நம்பிக்கை

20 Apr 2017

அதிமுகவின் இரு அணிகளும் ஒருங்கிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தநிலையில், கடந்த ஓரிரு நாட்களாக சசிகலா அணியில் இருந்த அமைச்சர்களும் எம்.எல்.ஏ.,க்களும் திடீரென சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று(19/04/2017) இரவு வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் பல சிக்கல்களை சந்தித்தது. தொகுதி மக்களையும், கட்சித் தொண்டர்களையும் எப்படிப் பார்ப்பது என இருந்தேன். அவர்கள் அனைவரும் என்னை ஒரு குற்றவாளியாகவே பார்த்தனர்.

சுப, துக்க நிகழ்வுகளுக்குக்கூட என்னை யாரும் அழைக்கவில்லை. நாங்கள் அழைத்தும் எங்களை தொண்டர்கள் சந்திக்க மறுத்தார்கள். சசிகலா நடத்திய நாடகம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாகவே தெரியும். நான் அவர்களிடமே எங்கள் பகுதியில் உங்களுக்கு ஆதராவாக யாருமில்லை என்று தைரியமாகக் கூறினேன். அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக் குடும்பத்தை அரசியலிலிருந்து விலக்க வேண்டுமென முடிவுசெய்து தற்போது அவர்களை விரட்டியுள்ளோம்.

மத்திய அரசு அதிமுக அரசை கலைக்க முயற்சி செய்தது. ஆனால் அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது. ஒரு குடும்பத்துக்காக நாங்கள் ஆட்சியை இழக்க விரும்பவில்லை. எனவே, அவர்களை ஒதுக்கிவைத்தோம். இனி, கட்சியை வழிநடத்த 10பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இனிவரும் காலங்களில் அவர்களே அதிமுக-வை வழிநடத்துவார்கள். கண்டிப்பாக மீண்டும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்’’ என்று தெரிவித்தார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha