இந்தியா செய்திகள்

25 ஆண்டுகளாக இழுவையில் உள்ள பாபர் மசூதி வழக்கு!

20 Apr 2017

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்தியாவின் பல்வேறு இடங்கள் மதக்கலவரங்களால் கொதிநிலைக்கு உட்பட்ட மறக்கமுடியாத நாளாகும். ஆம், அன்றுதான் லட்சக் கணக்கில் திரண்ட கரசேவகர்கள் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.

புராண நாயகன் ராமன் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். இதையடுத்து உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதக்கலவரங்கள் கனன்றது.

வரலாற்றுப் புகழ்மிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மூலம் ஒரு மதக்கலரத்தை தூண்டி சதி செய்ததாக, அன்றைய கரசேவகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, தற்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சராக உள்ள உமாபாரதி, தற்போது ராஜஸ்தான் ஆளுநராக உள்ள கல்யான் சிங் உள்ளிட்ட 22 பேர் மீதும் லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

கரசேவகர்களால் பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது, கரசேவை நிகழ்ச்சியில் அங்கே மேடையில் இருந்த அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்களின் பேச்சு வெறுப்பைத் தூண்டும்படியாக இருந்தது, கூட்டு சதி செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியிலும், பாபர் மசூதியை இடித்த லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலும் தனித்தனியாக நடைபெற்று வந்தது.

இதில், ரேபரேலி சிறப்பு விசாரணை நீதிமன்றம் 2001 ஆம் ஆண்டு பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, ரேபரேலி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றம் சிபிஐ-யின் மேல் முறையீட்டு மனுவை 2010ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து ரேபரேலி நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவித்ததை எதிர்த்து சிபிஐ-யும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ், ரோஹிண்டன் எஃப்.நாரிமன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர்.

பாபர் மசூதி இடிப்பு சம்வம் நடைபெற்று 25 ஆண்டுகளாகிறது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூண்ட மதக் கலவரங்களால் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இதனை உணர்ந்ததால்தான் என்னவோ, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம், பாபர் மசூதி இடிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து 2 ஆண்டுகளுக்குள் இந்த வழக்கை முடிக்கும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை ஏப்ரல் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும், ரேபரேலி நீதிமன்றத்திலும், லக்னோ நீதிமன்றத்திலும், தனித்தனியாக நடைபெற்று வரும் இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து லக்னோ நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில், தினந்தோறும் சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் வகையில் சிபிஐ தரப்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் இருந்து 4 வாரங்களுக்குள் சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாய்தா வாங்கக்கூடாது. நியாயமான காரணங்களுக்காக மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கை யார் தாமதப்படுத்தினாலும், எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்திடம் நியாயம் கோரலாம்.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இனியாவது, விரைவுபடுத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுமா என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது!

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha