இந்தியா செய்திகள்


இரு அணிகள் இணையும் முயற்சியில் தாமதம் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

Apr 20, 2017


இருவேறு அணிகளாகப் பிரிந்து நின்று இரட்டை இலை சின்னத்தையும் இழந்த அதிமுகவின் நிலை தமிழக அரசியலில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டது. இப்போது மீண்டும் பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளின் ஒன்று சேர்வதற்கான பேச்சுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், நேற்று முன் தினம்(18/04/2017) அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைப்படி சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கிவைக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்தனர். இதை வரவேற்றுப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'எங்களுடைய தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி இது' என்று குறிப்பிட்டார். இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இன்று(20/04/2017) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், ’’பன்னீர்செல்வத்தின் நிர்ப்பந்தத்தால் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க முடிவு செய்யவில்லை. கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஒன்றுகூடி,பொதுமக்கள், தொண்டர்களின் விருப்பபடி எடுக்கப்பட்ட முடிவுதான் இது. மேலும் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை’’ என்றும் தெரிவித்தார்.