இலங்கை செய்திகள்


சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் காலிமுகத்திடல் கூட்டத்தினை புறக்கணிக்க வேண்டும்

Apr 21, 2017


காலிமுகத் திடலில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மேதினக் கூட்டத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேதினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நேற்று வியாழக்கிழமை மேற்படி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் கண்டி கட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் வேறு இடங்களில் இடம்பெறும் கூட்டங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாருமே பங்கேற்கக் கூடாது.

காலி முகத்திடல் கூட்டத்தில் பங்கேற்போர் தொடர்பில் கட்சி உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும். இதனால் கட்சி பிளவடையும் நிலை ஏற்படும் என்றாலும் இந்நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாகும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி அமைச்சரின் கருத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் போது கட்சியின் பிளவு தெளிவாக அம்பலமாகும் எனவும்  அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.