விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, “நான் நாடகங்களை பார்த்து வளர்ந்தவன். நான் நாடகம் நடிக்க ஆசைப்பட்டவன். ஆனால், என்னால் அப்படி ஆக முடியவில்லை. அதற்கான பயிற்சியை நான் முறையாக எடுக்கவில்லை. அப்படியே சென்றுவிட்டது.”
“இந்த காலத்தில் நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு. அதை சொல்லும் போதே எனக்கு புல்லரிக்கிறது. கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா, வசனம் இருக்கிறதா என கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் தான் ஒப்புக்கொள்வார்கள். அந்த தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது,” என்று தெரிவித்தார்.