நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேரின் வங்கி பரிவர்த்தனை விபரங்களை கேட்டு, சம்பந்தப்பட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
12 பேரின் வங்கி கணக்கிலும் 2017 ஏப்ரல் முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.