இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அஸ்வின் 102 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த இன்னிங்சில் 144 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். 7-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த இருவரும் இதுவரை 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியா தரப்பில் 7-வது விக்கெட் அல்லது அதற்கு கீழே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னர் சச்சின் – ஜாகீர்கான் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அஸ்வின் – ஜடேஜா ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.