பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பஞ்குவார் மாவட்டம் பிரெமு என்ற பகுதியில் அணை (Dam) கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அணை கட்டும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு இன்று சில பயங்கரவாதிகள் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.