சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் நடைமேடையில் நேற்று மாலை ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது கஞ்சா போதையில் 4 இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தரையில் தட்டியும், அங்கு இருக்கும் இரும்பு கம்பிகளை அடித்தும் சென்றனர். அங்கு நடைமேடையில் ரெயிலுக்காக காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கினர்.
இதனால் ரெயில் நிலைய நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அதிர்சசி அடந்தனர். இளைஞர்கள் தாக்கியதில், ஒருவர் காயமடைந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் 3 பேரை ரெயில்வே போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.