இந்தியா தனது பாதுகாப்புத்திறனை மேம்படுத்தி வருகிறது. பாதுகாப்பு படையில் அதி நவீன ஆயுதங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் தாக்கும் பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. கே4 பிரிவைச் சோ்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை செலுத்த முடியும்.
இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணையில் நிலம், வானம், ஆழ்கடல் என மூன்று இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தும் திறனுள்ள சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. விசாகப்பட்டினம் கடற்கரையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா பரிசோதிப்பது இதுவே முதல்முறையாகும்.