கடலூர் தைகால் தோணித்துறை பகுதியை சேர்ந்த சகாதேவன் மகன் மணிக்கண்ணன்(35), முருகன் மகன் தமிழ்(37), சந்திரன் மகன் சாமிதுரை(63), ஆடியபாதம் மகன் மணிமாறன்(30), ரமேஷ் மகன் தினேஷ்(29), கந்தசாமி மகன் சற்குணன்(23) ஆகியோர் சென்ற இரண்டு படகுகள் கடல் சீற்றம், காற்றின் வேகம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கப்பல் இறங்கு தளத்திற்கு நீந்தி சென்று உயர் தப்பினர். உயிர் தப்பிய 6 மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கரை திரும்புவதில் சிக்கல் நீடித்தது.
இந்தநிலையில் இது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த கடலோர காவல்படை கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிய மீனவர்கள் ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் பத்திரமாக கரையில் இறக்கிவிடப்பட்டனர்.
கடலில் இருந்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் ஆறு பேரும் பத்திரமாக வந்ததில் மகிழ்ச்சி தெரிவித்தனர். இனி அரசு, மீன்வளத்துறை எச்சரிக்கையை உதாசீனப்படுத்த மாட்டோம் என மீனவர்கள் உறுதி அளித்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையை மீறி சென்றதால் இந்த விபத்து நேரிட்டது.