அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறு நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த செப்டம்பர் 27-ந்தேதி பெய்ரூட் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டன.
இதன்படி இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, நேற்று முதல் லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. லெபனானில் நடந்து வரும் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இன்று லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம் மீது இன்று இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு லெபனானில் ராக்கெட்டுகளை சேமித்து வைக்க ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த ஒரு இடத்தில் பயங்கரவாத நடவடிக்கை அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் விமானப்படை விமானம் மூலம் அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனானில் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல்பாடுகளை முறியடித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.