கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வரன் தேடி செயலிகள் மூலம் பதிவு செய்திருந்தார். அப்போது அவருக்கு பிரியா என்ற பெண் பழக்கமாகி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து இருந்த நிலையில், பிரியா தனது அக்காவின் மருத்துவ செலவுக்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை அந்த விவசாயியிடம் பெற்றுள்ளார். பின்னர் விவசாயி உடனான திருமணத்தை பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்த பிரியா, ஒரு கட்டத்தில் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதையடுத்து அந்த விவசாயி, பிரியா கொடுத்த நாமக்கல் விலாசத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிரியா கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சைபர் குற்றங்கள் பிரிவில் விவசாயி புகார் அளித்ததை அடுத்து வங்கி கணக்கை சோதனையிட்ட போலீசார் பிரியா, சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிரியாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இருப்பதும், தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி மட்டுமின்றி பல பேரிடமும் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கைதான பிரியா இளைஞர்களிடம் பேசும்போது தனக்கு 25 வயது என்றும், வீடியோ கால் பேசும்போது மேக்-அப் போட்டுவிட்டுதான் வருவார் என்றும், அப்போது இளைஞர்களை கவரும் வகையில் இனிக்க, இனிக்க பேசி கிறங்கடிப்பார் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.