சென்னையில் கடந்த 15 நாட்களில் இளம்பெண்கள் உட்பட 4 பேர் விடுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். கடந்த 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் 60 வயது ஆண் ஒருவருடன் தங்கியிருந்த 27 வயது இளம்பெண், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
கடந்த 7-ம் தேதி சூளைமேட்டில் ஆண் நண்பருடன் பீர் குடித்துவிட்டு புறப்பட்ட பியூட்டிசியன் திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செவ்வாயன்று, விடுதி மேலாளர் சுரேஷ் பாபு. தி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் நிர்வாண நிலையில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சைதாப்பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமர்ஷியல் பிரிவு மூத்த அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்த ரவி சங்கர் சாவ்பி பணியாற்றி வந்தார். சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், செவ்வாய் காலை சுயநினைவின்றி கிடந்துள்ளார். 108 ஆம்புலன்சை வரவழைத்து பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 15 நாட்களில் மட்டும் இளம்பெண்கள் உட்பட 4 பேர் விடுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் நடத்தி வரும் விசாரணையின் மூலம் விடுதிகளில் நிலவும் இருட்டு விலகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.