இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களின் கலாச்சாரம் இருப்பதாகவும் அந்த கலாச்சாரம் இனி இந்திய அணிக்குள் இருக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது மிகவும் முக்கியம். தற்போதைய இந்திய அணிக்குள் சூப்பர் ஸ்டார் வீரர்கள் என்கிற நட்சத்திர கலாச்சாரம் இருந்து வருகிறது. ஆனால் இதை எல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது. எதிர்காலத்தில் அனைத்தையும் இயல்பாக்க வேண்டும்.
ஏனெனில் நாம் கிரிக்கெட் விளையாடும் ஒரு விளையாட்டு வீரர்கள்தான் மற்றபடி நடிகரோ, சூப்பர் ஸ்டாரோ கிடையாது. எனவே இந்திய அணிக்குள் நட்சத்திர வீரர்கள் என்ற கலாச்சாரம் இல்லாமல் அனைவரும் சமமான விளையாட்டு வீரர்கள் என்கிற சூழல் இருக்க வேண்டும். மேலும் வீரர்கள் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு இயல்பான மனிதராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.