9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி துபாய் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றன. இதில் லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் நடப்பு தொடரில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே எளிதில் தோற்கடிக்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கவாஸ்கரின் அந்த கருத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இந்த வார்த்தை ஜாலங்களை நான் நம்பமாட்டேன். இந்திய பி அல்லது சி அணி பாகிஸ்தான் டாப் அணியை வீழ்த்தும் என்று சுனில் காவாஸ்கரின் சில கருத்துகளை பார்த்தேன். அது முட்டாள்தனம். முற்றிலும் முட்டாள்தனம். பாகிஸ்தான் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் பிரகாசிக்க நேரம் கொடுத்து, விளையாட்டுகளை கற்று வளர்த்துக்கொள்ள நேரம் கொடுத்தால், அவர்களால் யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” என்று கூறினார்.