பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிக்கும். அதேவேளை ஐ.சி.சி. தொடர்களின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தியது இல்லை. அந்த மோசமான வரலாற்றை மாற்றியமைக்க இந்திய அணி முயற்சிக்கு என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி அதிக திறமையும் போராட்ட குணத்தையும் கொண்டிருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கே வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நியூசிலாந்து அணி சொதப்ப மாட்டார்கள். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் உடன் நேற்று நாங்கள் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது நியூசிலாந்து தங்களை தாங்களே வீழ்த்தி கொள்ளக்கூடிய அணி இல்லை என்று அவர் எங்களிடம் சொன்னார். அதாவது முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்து வீரர்கள் அசத்துவார்கள் என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியை பார்க்கும்போது அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கக்கூடிய கடினமான கிரிக்கெட்டர்கள் உள்ளனர். அதனாலேயே அவர்கள் பெரும்பாலும் அரைஇறுதி அல்லது இறுதிப்போட்டிகளில் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேன் வில்லியம்சன் போன்ற சிறந்த வீரர்களும் ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களும் உள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் கலவையாக உள்ளனர். அதனால் அவர்கள் தோல்வியை சந்திக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்கள் தோல்வியை சந்தித்தால் அது இந்தியாவால்தான் இருக்கும்” என்று கூறினார்.