9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2025-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். 3 முறை கோப்பையை வென்ற ஒரே அணி இந்தியா தான். கிரிக்கெட்டில் வரலாற்றை உருவாக்கியதற்காக வீரர்கள், நிர்வாகம், பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகள். இந்திய கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இதே போல் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம். அவர்கள் போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். அற்புதமான ஆல்ரவுண்ட் காட்சிக்கு எங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகத்தான வெற்றி, வீரர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளீர்கள்.
அற்புதமான தனிப்பட்ட செயல்திறன் மற்றும் களத்தில் அபார ஆதிக்கம் செலுத்தியதன் மூலம், போட்டியில் இந்திய அணியின் அற்புதமான ஆட்டம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. வாழ்த்துகள் சாம்பியன்ஸ் என்று கூறியுள்ளார்.