9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன் இலக்கை இந்திய அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக 76 ரன்கள் (83 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா (263 ரன், 3 விக்கெட்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக 6-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாய் அமைந்ததற்கு பரிகாரம் தேடிக்கொண்டார்.
இந்நிலையில் கே.எல்.ராகுலின் எதிரி பந்து வீச்சாளர் கிடையாது அவரது மனநிலைதான் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “அவருக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. ஏனென்றால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தாக்கத்தை தற்போது வரை சுமந்து கொண்டிருந்தார். அவர் அந்த போட்டியில் மெதுவாக விளையாடியதால் மிகப்பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டார். அது அவரை சற்று காயப்படுத்தியது என்றே கூறலாம். இந்த தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அவர் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது.
இலக்கை துரத்தும்போது அவர் வசதியாக தெரிந்தார். கே.எல். ராகுலுக்கு இருக்கும் ஒரே எதிரி பந்துவீச்சாளர் கிடையாது, அவரது சொந்த மனநிலை. இந்த தொடரில் அவர் மிகவும் நிதானமாக இருந்தார். தொடர்ந்து விளையாடுவதில் மகிழ்ச்சி அடைந்தார். அவர் தனது விருப்பத்திற்கு தகுந்தவாறு பெரிய ஷாட்கள் சிறப்பாக விளையாடினார். அது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.