10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளது.
நடப்பு தொடரில் 8 ஆட்டத்தில் ஆடி 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ள டெல்லிக்கு இனி ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமாகும். உள்ளூரில் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 266 ரன்களை வாரி வழங்கிய டெல்லி அணியினர் 67 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
அதே சமயம் ஏற்கனவே குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர்களை 89 ரன்னில் மடக்கி டெல்லி அணி வெற்றி கண்டது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும். குஜராத்துக்கு எதிரான கடந்த லீக்கில் எப்படி செயல்பட்டோமோ அதே போல் ஒவ்வொரு ஆட்டத்தையும் விளையாட முடியும் என்று நம்புகிறேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது.’ என்றார்.
முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளியுடன் இருக்கிறது. தொடர்ந்து தடுமாறும் டேவிட் மில்லர் பார்முக்கு திரும்பினால் அந்த அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்படும். ஏற்கனவே சொந்த ஊரில் டெல்லிக்கு எதிராக மோசமான வீழ்ச்சியை சந்தித்த குஜராத், அந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் பழிதீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.