ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகதேவ் தனது வீட்டில் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது. இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல் ஆணையாளர் பிஜு ஜார்ஜ் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மூன்று பேர் கோகமேடியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திக்க வேண்டுமென்று கோகமேடியின் பாதுகாவலர்களிடம் கூறியுள்ளனர். பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றபின், அவர்கள் கோகமேடியிடம் சுமார் 10 நிமிடம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கோகமேடி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான நவீன் சிங் ஷெகாவத்தும், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் கோகமேடியின் வீட்டிற்கு வெளியே ஒரு நபரிடம் இருந்து பறித்த இருசக்கரவாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களை விரைவில் பிடிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
கோகமேடியின் வீட்டிற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.