மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தாராவியில் உள்ள காலா கைலா பகுதியில் அமைந்துள்ள அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ அருகிலிருந்த கட்டடங்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கோர தீ விபத்தில் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டவர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.