வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘டிஸ்கவரி சினிமாஸ்’ மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம். படத்தின் வெளியீட்டு தேதி மே மாதம் முதலில் வெளியாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த தேதி மாற்றமடைந்தது. இந்த நிலையில் வடக்கன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஸ்கவரி சினிமாஸ் உரிமையாளர் மு.வேடியப்பன் தெரிவித்துள்ளதாவது..
“எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்! உங்கள் அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.” என மு.வேடியப்பன் தெரிவித்துள்ளார்.