ஆந்திர மாநில பா.ஜனதா தலைவராக இருப்பவர் புரந்தேஸ்வரி. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மகள். இவரது சகோதரியைத்தான் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இவர் பா.ஜனதா மாநில தலைவராக ஆன பின்னர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களையும், நாடாளுமன்ற தேர்தலில் 3 இடங்களையும் பா.ஜனதா பெற்றது.
ஆந்திராவில் பா.ஜனதா கால்பதிக்க காரணமாக இருந்த புரந்தேஸ்வரிக்கு மத்திய மந்திரி சபையில் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் பதவி ஏற்ற மத்திய மந்திரிசபையில் அவருக்கு பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், ஒரு சபாநாயகர் பதவியும் வழங்குமாறு பா.ஜனதா மேல் இடத்திடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அந்த கட்சிக்கு 2 மந்திரி பதவிகள் மட்டும் கிடைத்தது.
சந்திரபாபு நாயுடுவின் வலியுறுத்தலின் பேரில் புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புரந்தேஸ்வரி ஏற்கனவே 2 முறை எம்.பி.யாக இருந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.