ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை (7 ஓவரில்) இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் அலிக் அதான்சி 4 ரன்னிலும், கேசி கார்டி ரன் ஏதுமின்றியும், மற்றொரு தொடக்க வீரர் பிரன்டன் கிங் 17 ரன்னிலும், ஹெட்மயர் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து ரூதர்போர்டு, கேப்டன் ஷாய் ஹோப்புடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று அரைசதம் அடித்ததுடன் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ரூதர்போர்டு 63 ரன்னிலும், ஷாய் ஹோப் 68 ரன்னிலும் லியாம் லிவிங்ஸ்டனின் சுழற்பந்து வீச்சில் அவுட் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. 39.4 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 202 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 21 ரன்னிலும் (15 பந்து, 4 பவுண்டரி), அடுத்து வந்த ஜாக் கிராவ்லி 3 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய வில் ஜாக்ஸ் 73 ரன்னில் (72 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ரூதர்போர்டு பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து ஜோஸ் பட்லர், ஹாரி புரூக்குடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 43 ரன்னுடனும் (49 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஸ் பட்லர் 58 ரன்னுடனும் (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். முன்னதாக ஜோஸ் பட்லர் 36 ரன்னை எட்டிய போது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை கடந்த 5-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியதுடன் முதலாவது ஆட்டத்தில் கண்டு இருந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது.