மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று 12 -20 செமீ மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டிய மாநிலத்திலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 23-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த சூழலில் கோவை மாவட்டம் வால்பாறையில் பலத்த மழை கொட்டித் தீர்த்து வருவதால் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 18) விடுமுறை என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை
இதற்கிடையே, கேரளாவில் வயநாடு மாவட்டத்துக்கு மிக பலத்த மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.