நாடாளுமன்ற மக்களவையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தது.
அதை தொடர்ந்து கடந்த மாதம் புதிய மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நடந்தது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர். நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதன் மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் எனவும், ஜூலை 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடந்த 6-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடப்பு நிதியாண்டுக்கான (2024-2025) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தின் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும், பெரிய அளவிலான சமூக, பொருளாதார முடிவுகள் இடம் பெறும் என்றும் ஜனாதிபதி உரையில் கூறப்பட்டு இருந்தது. எனவே, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில் மழைக்கால கூட்டத் தொடரில் 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் இந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ரெயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.