Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டுடி.என்.பி.எல்.: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை

டி.என்.பி.எல்.: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை

8-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சுடன் மல்லுக்கட்டியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த கோவை தொடக்கத்தில் சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுரேஷ் குமார் 16 ரன்னிலும், சுஜய் 15 ரன்னிலும், முகிலேஷ் 21 ரன்னிலும், ராம் அரவிந்த் 8 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். சாய் சுதர்சன் தனது பங்குக்கு 34 ரன் எடுத்தார்.

6-வது வரிசையில் களம் கண்ட கேப்டன் ஷாருக்கான் பந்துகளை நாலாபுறமும் விளாசியதுடன், ஸ்கோரையும் வெகுவாக உயர்த்தினார். அணி சவாலான ஸ்கோரை அடைய உதவிய ஷாருக்கான் 51 ரன்னில் (26 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் அவரது 3-வது அரைசதம் இதுவாகும். 20 ஓவர் முடிவில் கோவை அணி 9 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. மதுரை தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மதுரை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் (0), விக்கெட் கீப்பர் சுரேஷ் லோகேஷ்வர் (6 ரன்), சதுர்வேத் (10 ரன்), ஸ்ரீ அபிசேக் (1 ரன்), சசிதேவ் (2 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினர். 47 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து தள்ளாடிய மதுரை அணியால் அதில் இருந்து மீள முடியவில்லை. கடைசி கட்டத்தில் மிதுன் (26 ரன்), கார்த்திக் மணிகண்டன் (33 ரன்) ஆகியோர் கொஞ்சம் தாக்குப்பிடித்ததால் ஒரு வழியாக அந்த அணி மூன்று இலக்கத்தை தாண்டியது.

20 ஓவர்களில் மதுரை அணி 120 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கோவை 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கவுதம் தாமரைக் கண்ணன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

6-வது லீக்கில் ஆடிய கோவை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது. மதுரைக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments