Friday, October 18, 2024
Google search engine
Homeஇந்தியாபாகிஸ்தானிடம் சிக்கிய கார்கில் போர் ஹீரோவின் திகில் அனுபவங்கள்

பாகிஸ்தானிடம் சிக்கிய கார்கில் போர் ஹீரோவின் திகில் அனுபவங்கள்

கார்கில் போரின் வெற்றி தினம் ஜூலை 26-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் நடந்த இந்த போரில், எண்ணற்ற வீரர்கள் தீரத்துடன் போரிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானிய படையை எதிர்த்து போரிட்டபோது நேர்ந்த திகில் கலந்த கொடுமையான அனுபவங்களை பற்றி இந்திய வீரரான கார்கில் போர் ஹீரோ விமான கேப்டன் கே. நசிகேத ராவ் பகிர்ந்து இருக்கிறார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், கார்கில் போரின்போது மிக்-27 ரக விமானத்தில் பறந்திருக்கிறார். திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்து கீழே விழுந்துள்ளது. அதில் இருந்து எப்படியோ, தப்பி வெளியே வந்திருக்கிறார். ஆனால், அவரை பாகிஸ்தானிய படைகள் பிடித்து கொண்டன. பல நாட்கள் அவரை சித்ரவதை செய்துள்ளன.

அவருக்கு உணவு மறுக்கப்பட்டது. தூங்கவும் விடவில்லை. அவரை பேச வைப்பதற்காக நூதன முறையை கடைப்பிடித்து நேர இடைவெளி விட்டு அடித்து, துன்புறுத்தி உள்ளனர்.

போரின்போது, 4 விமானங்களில் வேறு 3 விமானிகளுடன் ஸ்ரீநகரில் இருந்து நசிகேத ராவ் புறப்பட்டு சென்றார். இதில், முந்து தலோ என்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய இலக்கு. அந்த பகுதியில், எதிரி படையின் ராணுவ தளவாடங்கள் குவியலாக இருந்துள்ளன.

அவற்றை தாக்கி அழிக்க வேண்டும். இதற்காக ராக்கெட்டுகளை கொண்டு தாக்கியுள்ளனர். அப்படி தாக்கி கொண்டிருக்கும்போது, திடீரென விமான இயந்திரம் பழுதடைந்ததும், ராவ் 15 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர் தைரியத்துடன் அந்த முடிவை எடுத்துள்ளார். கீழே குதித்த சில விநாடிகளில் விமானம் மலைப்பகுதியில் வெடித்து உள்ளது. அது சரியான முடிவு என உணர்ந்திருக்கிறார். ஆனால், அதன்பின்னரே அவருக்கு சோதனை காத்திருந்தது. சுற்றிலும் பனி படர்ந்திருந்தது. எந்த இடம் என அவருக்கு தெரியவில்லை. கைத்துப்பாக்கி ஒன்றும் 16 முறை சுட கூடிய தோட்டாக்களும் அவரிடம் இருந்தன.

அவரிடம் ரகசிய தகவல்களும் இருந்தன. அவற்றை மறைத்து வைத்து கொண்டு, நிலைமையை கவனித்திருக்கிறார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு கொண்டே இருந்துள்ளது. இதனால், தப்பி மறைந்து கொள்ள பார்த்திருக்கிறார்.

அப்போது 5 முதல் 6 வீரர்கள் அவரை பார்த்து விட்டனர். அப்போதுதான் அவருக்கு இந்திய படையினர் பகுதியில் இல்லை என தெரிந்தது. அவர்களை நோக்கி 8 முறை விரைவாக சுட்டுள்ளார். அது தீர்ந்ததும், தோட்டாக்களை மீண்டும் துப்பாக்கியில் செலுத்த முயல்வதற்கு முன் பாகிஸ்தான் வீரர்களில் ஒருவர் ராவை நெருங்கி விட்டார்.

ஒரு சில விநாடிகளில், அவரின் வாயில் ஏ.கே. 47 துப்பாக்கியின் முனை சுட தயாராக இருந்தது. ஆனால், பாகிஸ்தானிய ராணுவ கேப்டன் சுட வேண்டாம் என உடனடியாக தடுத்து நிறுத்தி உள்ளார்.

இந்திய விமானி ஒரு வீரராக அவருடைய பணியை செய்கிறார் என கூறி சக வீரர்களை அந்த பாகிஸ்தானிய கேப்டன் அமைதிப்படுத்தி இருக்கிறார். ராவுக்கு அவர் முதலுதவியும் அளித்திருக்கிறார். அவர் நல்ல நபராக நடந்திருக்கிறார் என ராவ் கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டரில், திரும்ப சென்று பார்த்திருக்கிறார். அப்போது, அந்த முகாம் இந்திய பகுதியிலேயே இருந்தது என தெரிய வந்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருந்துள்ளது.

இதன்பின் முகாமில் இருந்த ராவை ஹெலிகாப்டரில் வைத்து ஸ்கார்டு என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் மென்மையான விசாரணை நடந்துள்ளது. 24 மணிநேரத்திற்கு பின்னர், சி130 விமானம் வந்துள்ளது. அவர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டிக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.

இதன்பின்பு, ஐ.எஸ்.ஐ. படையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதன்பின்னரே, உண்மையான சோதனை தொடங்கியிருக்கிறது. மன, உடல், உணர்வு ரீதியாக அவரை தாக்கி, பேச வைப்பதற்கான முயற்சி நடந்துள்ளது. வெப்ப சிகிச்சை, அதிக சக்தி வாய்ந்த பல்புகள் எரிந்து கொண்டிருக்கும். உணவு கிடையாது. தூக்கத்திற்கு அனுமதி இல்லை. நிற்க வைப்பார்கள். அடிப்பார்கள்… என பலவகையான கொடுமைகள் நடந்துள்ளன.

இதற்கு அடுத்து 3-ம் நிலை சோதனையும் தயாராக இருந்தது. அதில், போதை பொருட்கள் செலுத்தப்படும். இந்த சோதனையில் சிக்கினால், நிலைமை மோசமடைந்து விடும்.

ஆனால், அவருடைய அதிர்ஷ்டம் ராவை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு சென்று விட உத்தரவு வந்துள்ளது. இதன்பின்பு அவருக்கு புது ஆடைகள் வழங்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கொண்டு செல்லப்பட்டார். சில அடிப்படை மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்புக்கு பின் இந்திய தூதரகத்திடம் ராவ் ஒப்படைக்கப்பட்டார்.

பெற்றோரிடம் பேசி உடல் நலத்துடன் இருக்கிறேன் என ராவ் கூறியுள்ளார். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடமும் பேசியுள்ளார். போருக்கு பின்னர், ஊடுருவல்காரர்களிடம் இருந்து நிலம் திரும்ப கையகப்படுத்தப்பட்டது. அப்போது, ராவுக்கு உதவிய அந்த பாகிஸ்தானிய கேப்டன் கொல்லப்பட்டு விட்டார் என ராவ் தெரிந்து கொண்டார்.

ஏனென்றால், ராணுவத்தில் இருந்த உளவு வட்டாரங்களிடம் இருந்து அந்த பாகிஸ்தான் கேப்டன் பயன்படுத்திய டைரியின் சில விசயங்களை ராவ் பெற்றிருக்கிறார். அவர் என்னை நடத்திய விதத்திற்காக அவர் மீது எனக்கு அதிக மதிப்பு உண்டு என்று ராவ் கூறியுள்ளார்.

இதன்பின் ராவ், போக்குவரத்து விமானங்களை ஓட்ட தொடங்கியிருக்கிறார். 2017-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்த்தக விமானங்களை ஓட்டி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments