பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான (டபிள்யூ.பி.எல்.) வீராங்கனைகளின் ஏலத்தில் அதிக விலைக்கு போன சர்வதேச போட்டியில் ஆடாத இந்தியரான 20 வயதான காஷ்வீ கவுதம், வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். பந்து வீச்சு மட்டுமின்றி பின்வரிசையில் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்.
அவர் கூறுகையில், ‘உண்மையில் நம்ப முடியாத ஒரு தருணம் இது. ஏலம் நடந்து கொண்டிருந்தபோது நான் அணிக்குரிய பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பயிற்சி முடிந்ததும் என்னை ஏலத்தில் எடுத்திருப்பதை சக வீராங்கனை கூறினார். எனது திறமையை வெளிக்காட்ட இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.
நான் எப்போதும் மிதாலி ராஜின் (குஜராத் அணியின் ஆலோசகர்) ஆட்டத்தை பார்த்து ரசிப்பேன். இப்போது அவரிடம் நிறைய ஆலோசனை பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. அலிசா ஹீலி உள்ளிட்ட வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு பந்து வீச ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டியில் சிறப்பாக ஆடும் போது இந்திய அணிக்குள் அடியெடுத்து வைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.