மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். நமது இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம். இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்களில் செயலாக்க முடியும். கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது.
“துங்கு அப்துல் ரகுமான்” மலேசியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்த பிரதமர் அன்வர் மற்றும் அவரது குழுவினருக்கு நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2025-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்புக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக குரல் கொடுப்போம். மேதகு பிரதமரே, உங்களது நட்புக்கும், இந்தியாவுடனான உறவில் உங்களது அர்ப்பணிப்புக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களது வருகை வரும் பத்தாண்டுகளுக்கு நமது உறவுகளுக்கு புதிய திசையை அளித்துள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.