தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியை ஏறக்குறைய 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். போட்டிக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு ஆய்வு செய்தார். போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பார்வையாளர் அமர்ந்து பார்க்கும் இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். போட்டியை சிறப்பாக நடத்திட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.