பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் 100 மீட்டர்(டி12) ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
இதனால், 100 மீட்டர் (டி12) ஓட்டப் போட்டியில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புது தில்லியைச் சேர்ந்த 24 வயதான நடப்பு உலக சாம்பியனான சிம்ரன் அவரது வழிகாட்டியான அபய் சிங்குடன், அரையிறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்த ஜெர்மனியின் கேத்ரின் முல்லர் ரோட்கார்ட்க்கு அடுத்தபடியாக இறுதிச்சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
அவர் 100 மீட்டர் இலக்கை 12.17 வினாடிகளில் கடந்து அசத்தினார்.
சிம்ரன், முல்லர்-ரோட்கார்ட் தவிர, உக்ரைனின் ஒக்ஸானா போடூர்ச்சுக் மற்றும் தற்போதைய பாராலிம்பிக் சாம்பியனும், உலக சாதனையாளருமான கியூபாவின் ஒமாரா டுராண்ட் ஆகியோர் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கத்துக்காக போட்டியிட உள்ளனர்.
டி12 பிரிவு பார்வை குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.