Saturday, December 21, 2024
Google search engine
Homeஇந்தியாசர்ச்சை பேச்சு: வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது- 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

சர்ச்சை பேச்சு: வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகா விஷ்ணு கைது- 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், “என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பள்ளி நிகழ்ச்சியில் பேசிய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், பேச்சாளர் மகாவிஷ்ணு நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடமைகள் இருந்ததால், அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இதில் ஓடி ஒளிவதற்கான விஷயமே கிடையாது. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தை சொல்லிவிட்டேன்.

இன்று மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். இந்திய சட்டத்தின் மீதும், தமிழக போலீசார் மீதும் எனக்கு மதிப்பு உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸ் என்னை பற்றி அதிகம் பேசி இருந்தார். என் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அதற்கு விளக்கம் கொடுக்க தமிழகத்தில் இருக்க வேண்டும். இறைவனிடம் சரணாகதி செய்து நேரடியாக உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்து அவதூறாக பேசியதாக மகா விஷ்ணு மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைதாப்பேட்டை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 192, 196(1) a, 352, 353(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments