ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக சாம்பியனான 28 வயது ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹரா கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டிக்காக இந்தியா வந்த அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘ஒடிசா மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்க டெல்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்ததும் அருகில் உள்ள ஓட்டலுக்கு காரில் செல்ல காத்திருந்த போது உடைமைகளை வலுக்கட்டாயமாக தள்ளிக்கொண்டு சென்ற டிரைவர் ஓட்டலுக்கு காரில் கொண்டு சென்று விட்டதும் பேசியதை விட கூடுதல் கட்டணம் வசூலித்து மோசடி செய்தார்.
பிறகு கட்டாக் சென்றதும் அங்கு ஓட்டலில் தங்கும் அறை கிடைக்காமல் வரவேற்பறையில் சுமார் 4 மணி நேரம் காத்து கிடந்தேன். மறுநாள் காலையில் பயிற்சிக்கு செல்ல வாகன வசதியின்றி சிரமத்திற்கு உள்ளானேன். எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு மோசமான பயணம் இது தான்’ என்று தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்து இருந்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அலைக்கழிக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது.
இது குறித்து இந்திய பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் சஞ்சய் மிஸ்ரா கருத்து தெரிவிக்கையில், ‘இது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் போட்டி அமைப்பாளர்களிடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினேன். அவர் பெரிய வீராங்கனை. அத்துடன் நமது விருந்தினர். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.
அவரிடம் இருந்து போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி குறித்து எந்தவித இ-மெயிலும் எங்களுக்கு வரவில்லை. தொழில்நுட்ப பிரச்சினை மற்றும் தவறான தகவல் தொடர்பால் இது நடந்து விட்டது. அவர் எப்போது வருவார் என்பது போட்டி அமைப்பாளர்களுக்கு தெரியாது. வேண்டுமேன்றே இந்த தவறு நடக்கவில்லை’ என்றார்.