இந்திய விமான படையின் புதிய தளபதியாக அமர் பிரீத் சிங் பதவியேற்க உள்ளார். இந்திய விமான படையின் தலைவராக பதவி வகித்து வரும் வி.ஆர். சவுத்ரி வருகிற 30-ந்தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு அந்த பதவிக்கு, பணிமூப்பு கொள்கையின்படி, ஏர் மார்ஷலாக பதவி வகித்து வரும் சிங்கை அரசு தேர்வு செய்துள்ளது.
1984-ம் ஆண்டு டிசம்பரில் பணியில் சேர்ந்த சிங் போர் விமானியாக செயல்படுபவர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமான படையின் துணை தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 4 தசாப்தங்களாக பணியில் உள்ள அவர், தளபதி, பணியாளர், அறிவுறுத்தல் மற்றும் வெளிநாட்டு நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு அந்தஸ்திலான முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் வாய்ந்தவர்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பயின்றவரான சிங், பாதுகாப்பு சேவைக்கான பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றிலும் படித்திருக்கிறார். அவர், பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிநேரம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ரஷியாவின் மாஸ்கோ நகரில், மிக்-29 போர் விமான மேம்பாட்டு திட்ட மேலாண்மை குழுவை வழிநடத்தி சென்றிருக்கிறார். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக விமானத்தின் திட்ட இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.