அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர் கெவின் முல்லின்ஸ் (வயது 54). கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் வழக்கம்போல் கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.
அங்கு வழக்கு விசாரணை பணிகள் நிறைவடைந்த பிறகு போலீஸ் அதிகாரி மிக்கே ஸ்டைன்சு (43) நீதிபதியின் தனி அறைக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரி மிக்கே திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் நீதிபதியை சரமாரியாக சுட்டுத்தள்ளினார். துப்பாக்கி சூடு சத்தத்தைக் கேட்டதும் கோர்ட்டு ஊழியர்கள் அங்கு விரைந்தனர். அப்போது நீதிபதி கெவின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய மிக்கேயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
அமெரிக்காவில் ஏற்கனவே சமீபகாலமாக துப்பாக்கி வன்முறைகள் அதிகளவில் அரங்கேறுகின்றன. இதனை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோர்ட்டில் நீதிபதியை போலீஸ் அதிகாரியே சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.