கேரளாவில் நிபா வைரஸ் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரசால் பாதித்து கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதித்து உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பு பட்டியலில் 267 பேர் உள்ளனர். இதில் 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலிலும், 90 பேர் இரண்டாம் நிலை பட்டியலிலும் உள்ளனர். இவர்களில் கடந்த 20-ந்தேதி மாதிரி பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 6 பேரின் முடிவுகளிலும் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடர்பு பட்டியலில் உள்ள 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள், மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.