இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் கேத் மிடில்டன் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்றும் தகவல் வெளியானது. பூரணமாக குணமடைந்து மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பின்னர், புற்றுநோய்க்கான 6 மாத கால ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்துவிட்டதாக கடந்த 9-ம் தேதி இளவரசி கேத் மிடில்டன் கூறியிருந்தார். சமீபத்தில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார். கென்சிங்டன் அரண்மனை நிர்வாகிகள் மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள சிறார் மேம்பாட்டு மைய உறுப்பினர்களுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.
இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக இன்று பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.
இளவரசி கேத் மிடில்டன் தன் கணவர் இளவரசர் வில்லியம், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோருடன், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டுக்கு அருகில் தேவாலய சேவையில் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தி சன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இளவரசர் கார் ஓட்ட, பின் இருக்கையில் இளவரசி கேத் மிடில்டன் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. இளவரசர் இந்த நிகழ்விற்காக கடற்படை உடை மற்றும் நீல நிற டை அணிந்திருந்தார். இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு பொது பணிகளுக்கு திரும்பியதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
இதேபோல் இங்கிலாந்து மன்னர் சார்லசும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.