இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கவுன்சில் கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. 93-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் வருகிற 29-ந் தேதி நடக்க இருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருக்கும் ஜெய்ஷா கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் அந்த பொறுப்பை டிசம்பர் 1-ந் தேதி ஏற்க இருக்கிறார். இருப்பினும் அதுவரை அவர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் பொறுப்பில் தொடருவார் என்பதால் புதிய செயலாளர் நியமனம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை ஸ்பான்சராக இருந்த பைஜூஸ் நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை, பெங்களூருவின் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி தொடக்கம், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கு அனுமதி வழங்குதல், வடகிழக்கு மாநில கிரிக்கெட் வளர்ச்சிக்கான திட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.