அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் பல்வேறு அணிகள் தரப்பிலும் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை எடுக்க பி.சி.சி.ஐ.-க்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.
பொதுவாக முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது.
இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களைத்தான் தக்கவைக்க பி.சி.சி.ஐ. அனுமதி வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.