அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 36 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர் கனமழையால் அங்குள்ள பல ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 32 பேர் பலியாகினர். இதன்மூலம் அங்கு கனமழைக்கு பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இதனிடையே தற்காலிக பிரதமர் பிரகாஷ் மான் சிங், உள்துறை மந்திரி, உள்துறைச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு அமைச்சர்களை உள்ளடக்கிய அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
நேபாளம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூன்று நாட்களுக்கு மூடவும், நடந்து கொண்டிருக்கும் அனைத்து தேர்வுகளையும் நிறுத்தவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக காத்மாண்டுவுக்கான அனைத்து நுழைவுப் பாதைகளும் தடைப்பட்டுள்ளன.