இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக தொடக்க நாள் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் கனமழையும் பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. முதல் நாளில் 55 ஓவர்கள் இழப்பானது. மொமினுல் ஹக் 40 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தூரல் விழ தொடங்கியது. சற்று நேரத்தில் அது பலமான மழையாக மாறியது. 11 மணியளவில் மழை விட்டதும் மைதானத்தை முழுமையாக மூடப்பட்டிருந்த தார்ப்பாயில் தேங்கி நின்ற தண்ணீரை மைதான ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மேகமூட்டம் காரணமாக மைதானத்தின் சுற்றுப் பகுதி இருள் நிறைந்ததாக காணப்பட்டது. மைதான சூழ்நிலையை ஆய்வு செய்த நடுவர்கள் பிற்பகல் 2.05 மணியளவில் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். மழை காரணமாக நேற்று ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இதனால் மைதானத்தில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்றைய தினமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தால் அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இன்னும் இரண்டு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை கூறியிருக்கும்நிலையில், மீதம் இருக்கும் இரண்டு நாட்களில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது கடினமாகிவிடும். ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி புள்ளி பட்டியலில் பெரிய மாற்றங்கள் நிகழாமல் போகலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய அணிக்கு அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரும், அதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணிக்கு மொத்தமாக இன்னும் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியை தவிர எட்டு போட்டிகள் மீதம் உள்ளன. இதில் சொந்த மண்ணில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் மேலும் ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
ஒருவேளை ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு அமையும்.