பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அம்மாகாணத்தில் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், வெளிமாகாணங்களை சேர்ந்தவர்கள், உள்ளூர் மக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன
இந்நிலையில், அம்மாகாணத்தின் பஞ்ச்கூர் நகர் குபா இ அபடன் பகுதியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 8 கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்று இரவு கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒரு தொழிலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்
அதேவேளை, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 20 தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.