Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டுஇந்தியா - வங்காளதேசம் டெஸ்ட்: விளையாடும் மழை - இன்றாவது ஆட்டம் நடைபெறுமா..?

இந்தியா – வங்காளதேசம் டெஸ்ட்: விளையாடும் மழை – இன்றாவது ஆட்டம் நடைபெறுமா..?

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் (40 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (6 ரன்) களத்தில் இருக்கிறார்கள்.

2-வது நாளான நேற்று முன்தினம் முழுக்க முழுக்க மழை பெய்ததால் மைதானம் முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. ஒரு பந்து கூட வீசப்படாமல் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்தானது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று போட்டி தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். விடுமுறை தினம் என்பதால் ரசிகர்கள் வருகையும் அதிகமாக இருந்தது. நேற்றைய தினம் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. முந்தைய நாள் பெய்த மழையால் மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெயில் இல்லாததால் மைதானத்தை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பிற்பகல் 2 மணி அளவில் மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பவுலர்கள் ஓடும் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை கண்டறிந்த நடுவர்கள் விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி 3-வது நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

இந்நிலையில் கான்பூரில் அடுத்த இரு நாட்களில் மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 33 செல்சியஸ் வரை வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 4-வது நாளான இன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 2 நாள் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்டில் முடிவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments